குத்தாலம் அருகே திருமணஞ்சேரி பகுதியில் இருதரப்பு மோதல் சம்பவத்தை கண்டித்தும் , குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது . இச்சம்பவம் தொடர்பாக குத்தாலம் காவல் நிலையத்தில் இருதரப்பு மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குத்தாலம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து திருமணஞ்சேரி பகுதியில் ஒரு சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தி அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் , ஒரு சமூகத்தின் மீது பொய்யான புகாரின் பேரில் காவல்நிலையத்தில் போடப்பட்ட வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் , திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பக்தர்களிடம் தரிசனம் என்ற பெயரில் பணம் வசூல் செய்து அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.