மதுரை மல்லிகை விலை கிலோ ரூ.1600ஆக அதிரடி உயர்வு

கடந்த சில நாட்களாக விலை குறைந்து காணப்பட்ட மதுரை மல்லிகை முகூர்த்த நாள் என்பதால் இன்று கிலோ ரூ.1600ஆக உயர்ந்தது.
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி அருகிலுள்ள விருதுநகர் ராமநாதபுரம் சிவகங்கை திண்டுக்கல் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.
இந்த வளாகத்தில் மட்டும் சற்றேறக்குறைய 200க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த பூ வியாபாரிகள் உள்ளனர். நாள்தோறும் சராசரியாக மதுரை மல்லிகை ஐம்பதிலிருந்து அறுபது டன்னுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் மதுரை மல்லிகை ஏற்றுமதி செய்யப்படுகிறது. மணம் மற்றும் அதன் தன்மை காரணமாக மதுரை மல்லிகை தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இதன் காரணமாக மத்திய அரசு மதுரை மல்லிகைக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக ரூ.500லிருந்து ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த மதுரை மல்லிகை முகூர்த்த நாட்கள் என்பதால் இன்று அதிரடியாக கிலோ ரூ.1600ஆக விற்பனை செய்யப்படுகிறது. பிச்சி ரூ.400, முல்லை ரூ.300, செண்டு மல்லி ரூ.70, பட்டன் ரோஸ் ரூ.80 என பிற பூக்களின் விலை நிலவரம் காணப்படுகிறது. மதுரை மல்லிகை ஒரு சில நாட்கள் இதை விலையில் நீடிக்கும் என்று சில்லறை பூ விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்