சென்னை துரைப்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக துரைப்பாக்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளருக்கு தொடர் புகார்கள் வந்தது. அதன் பேரில் ஆய்வாளர் செந்தில் முருகன், உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில், தலைமை காவலர் சுபாஷ் சந்திர போஸ், சுதாகர், முதல் நிலை காவலர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை செய்வோரை கண்காணித்து பிடிக்க உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் தனிப்படை போலீசார் துரைப்பாக்கம், இளங்கோ நகர் கெனால் அருகே கண்காணித்த போது நான்கு பேர் கொண்ட கும்பல் பைகளில் கஞ்சாவை மறைத்து வைத்து கல்லூரி மாணவர்கள் போல் வலம் வந்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் வைத்திருந்த நான்கு பைகளில் 20 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் அவர்கள் துரைப்பாக்கத்தை சேர்ந்த 3ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர் ரஞ்சித்(20), விக்னேஷ்(23), ஐடி ஊழியர் பரத்(22), கண்ணகி நகரை சேர்ந்த சூர்யா(எ) மண்டை சூர்யா(23), என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து மொத்தமாக சென்னையில் விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் சூர்யா மீது போக்சோ, அடிதடி, பொதுச்சொத்தை சேதம் விளைவித்தது உள்ளிட்ட நான்கு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
நான்கு பேர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.