மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரழுந்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா நெல்லியடி மாரியம்மன் ஆலயமானது அமைந்துள்ளது.இக்கோவிலில் கடந்த 6 ஆம் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கி பால்குடம் மற்றும் காவடி ஆகியவற்றுடன் தொடர்ந்து மாரியம்மனுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றது.

இதனை அடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.இதனை முன்னிட்டு மேள வாத்தியங்கள் முழங்க வேதபுரீஸ்வரர் தேவஸ்தான திருக்குளத்தில் இருந்து அலகு காவடி,சக்தி கரகம் ஆகியவை புறப்பட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தன

பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து 16 அடி நீளம் கொண்ட அலகு காவடி தீ மிதித்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
