மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையத்தில் பயன்பாட்டில் இருந்த கழிப்பறையை இடித்துவிட்டு புதிய கழிப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்பதை அறிந்து மகிழ்கிறேன். குத்தாலம் பகுதி நவகிரக கோவில்கள் சுற்றியுள்ள பகுதி. நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோகிலாம்பாள் கோவிலுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் கடந்து செல்கின்ற மைய பகுதியாக குத்தாலம் பேரூந்து நிலையம் இருந்து வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள்.
தமிழகத்தின் எட்டு திசைகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வருகை தரும் பயணிகள் கழிப்பறை வசதி இல்லாததால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் தங்களின் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். குத்தாலம் பேரூர் கடைகளில் பணிபுரியும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், வணிகர்களும் இயற்கை உபாதைக்கு பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். கழிப்பறை கட்டிடத்தை இடிப்பதற்கு முன்பாக இயற்கை உபாதைகளை கழிக்க மாற்று ஏற்பாடுகளை தாங்கள் திட்டமிட்டிருக்க வேண்டும்.

ஆகவே நடமாடும் கழிப்பறை வசதியையோ அல்லது தற்காலிக கழிப்பறை வசதியையோ தாங்கள் ஏற்படுத்தி தர வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன். இவற்றை செய்ய இயலாவிடில் குறைந்தபட்சம் குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கழிப்பறையை புதிய கழிப்பறை கட்டிடம் கட்டும் வரை பொதுமக்கள் , வணிகர்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்.பொது கழிப்பிட வசதி இல்லாததால் நம் பேரூராட்சிக்கும், நம் ஊருக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குரிய கழிப்பறை வசதி என்பது அடிப்பட, அவசிய, அவசர தேவையாகும் புதிய கட்டிடம் கட்டும் பணியை கால தாமதம் செய்யாமல் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு தாங்கள் உத்தரவிட வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்.குத்தாலம் பேரூராட்சி மன்ற தலைவராக ஒரு பெண்ணாக,பெண்களின் துன்ப நிலை அறிந்து தற்காலிக கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி கோரிக்கை வைத்துள்ளார்.