நாகை மாவட்டத்தில் வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டம் மூலம், குடிநீர் வழங்க ரூ.1752 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருக்குவளையில் நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பேச்சு.

உலக தண்ணீர் முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் நாகை மாவட்டத்தில் உள்ள 193 ஊராட்சிகளில் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக திருக்குவளையில் ஊராட்சி மன்ற தலைவர் இல பழனியப்பன் தலைமையில் நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை.மாலி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய ஆட்சியர், நாகப்பட்டினம் மாவட்டத்தை பொருத்தவரை 6 ஒன்றியங்களிலும் குடிநீர் வசதி என்பது மிகவும் குறைவாக உள்ளதாகவும் அதனை மேம்படுத்துவதற்காக பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்திற்கு தேவையான குடிநீரை மாவட்டத்திலே எவ்வாறு மேம்படுத்தி உற்பத்தி செய்ய முடியும் என பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டோம். பெரும்பாலான இடங்களில் உவர் நீரே அதிகமாக உள்ள நிலையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசால் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டவும்,ரூ.1752 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கிணறுகள் தோண்டப்பட உள்ளது.
இதன் மூலமாக ரூ165 கோடி மதிப்பீட்டில் ஊரக பகுதிகளில் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி 2025 ஆம் ஆண்டுக்குள் தடுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் சிக்கனம் குறித்தும் தண்ணீரின் அவசியம் குறித்தும் ஒவ்வொருவரும் உணர்ந்து மழைநீரை சேகரித்து நிலத்தடி நீரை பெருக்குவதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும் என அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் ஒரு வருட கால வரவு செலவு அறிக்கை வெளிப்படையாக பேனர் மூலம் அச்சிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மக்களை தேடி மருத்துவ மூலம் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களின் கண்காட்சி மற்றும் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும் இடுபொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

இறுதியாக பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர். கூட்டத்தில் திருக்குவளை வட்டாட்சியர் ஜி. ராஜ்குமார், கீழையூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேகரன், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாத்தி ஆரோக்கிய மேரி, எஸ்.வெற்றிச்செல்வன், கீழையூர் வட்டார ஆத்மா குழு தலைவர் எ.தாமஸ் ஆல்வா எடிசன், மாவட்ட கவுன்சிலர் கௌசல்யா இளம்பரிதி, கீழையூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வை. பாலசுப்பிரமணியன், வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஆர்.ரங்கநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் சுதா அருணகிரி, திருக்குவளை வட்ட தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர் த.திலீப் மணிகண்டன், ஆத்மா குழு உறுப்பினர் மரிய சார்லஸ், அன்னை அஞ்சுகம் முத்துவேலர் அறக்கட்டளை உறுப்பினர் இல. மேகநாதன், திருக்குவளை வட்ட வழங்கல் அலுவலர் டி.திலகா, அனைத்து துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இறுதியாக திருக்குவளை ஊராட்சி செயலர் சுரேஷ்குமார் நன்றி உரை வழங்கினார்.